Sunday, September 1, 2019

0. Introduction

ஆதி சங்கரர் அருளிய மனீஷா பஞ்சகம் வேதத்தின் சாரம். தமிழ் அன்பர்கள் ரசிக்கும் வகையில் இங்கு அதைத் தமிழ் வடிவில் செய்யுளாக மொழிபெயர்த்து வழங்கியுள்ளேன்.

உங்கள் கருத்துக்களை என்னிடம் பகிர thiagar1@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். நன்றி!

சு. இராசகோபாலன் 

2. Guru VaNakkam

குரு வணக்கம் 


சங்கர சண்மதத் தாபக ராமொரு சற்குருவின் 
வங்கிசம் வந்தருள் சந்திர சேகரர் பின்வருவோர் 
திங்க லிளம்பிறை யாயிரம் கண்ட சயேந்திரர்பின் 
தங்கும் விசயேந் திரராம் குருமார் பதம்பணிவோம் 

1. IRai VaNakkam


இறை வணக்கம் 



ஆதி சங்கரர் ஆக்கிய 
வேத சாரமாம் 'பஞ்சகம்'
கோ தி லாச்செந் தமிழிலே 
ஓத உதவுவான் ஐங்கரன் 

5. Sankarar Aruliya Panchakam

5.
கனவோ நனவோ கடுந்துயி லதுவோ
அனைத்திலு நிகழும் அனுபவ மெல்லாம்
பளிச்சென வொளிரச் செய்வதும் யாரோ?
அகில நிகழ்ச்சிக ளனைத்தையும் தானே
அறிந்திடும் ஒருகரி யாவதும் யாரோ?
அகிலம் படைக்கும் பிரமன் முதலா
அற்பப் புழுவீ றாக வெவற்றுளும்
உயிர்ப்பொறி யாக உறைபவர் யாரோ?
அவரைக் கட்புல னறியா தெனினும்
அகத்தா லுணர்ந்தவர் யாரோ அவர்தாம்
இழிபிறப் பாளரோ இருபிறப் பாளரோ
அவரே எனக்கிங் காசான் இதனைத்
தவப்பெருந் துணிவுடன் உரைத்திடு வேனே!

['அவனன்றி ஓரணுவும் அஅசையாது' - ப்ரஞ்ஞானம் ப்ரஹ்மம் - ரிக் வேதம்]


6.
பாரினி லுணர்வாய்ப் பரந்து தோன்றும்
பொருளெலா மெனது புரையுணர் வாலும்
முக்குண மதனின் முறைபிறழ் வாலும்
இக்கணம் விரிந்த கற்பனை யதுவே!
நின்று நிலைப்பதும் நிமலமா யென்றும்
இன்பமே யளிப்பது மாகிய பரம்பொருள்
என்னுளும் யானாய் இருப்பதை யறிந்தேன்
உறுதியா யிதனை யுணர்ந்ததால் யானே
இழிகுலத் தவரோ இருபிறப் பாளரோ
யாவரே யாயினு மாக வவர்தாம்
எனக்கிங் காசா னெனப்பகர்ந் திடுவேன்

[ப்ரஹ்மம் யானே! - அஹம் ப்ரஹ்மாஸ்மி - யஜுர் வேதம்]


7.
மாற்றமே யுலகின் மாறா  நிலையெனச்
சாற்றிய வாசான் உரையது போற்றி,
ஒருநிலை நில்லா வுளத்தினை யொருமுகம்
ஆக்கியும், அதனுள் அழிவிலாப் பிரமம்
நீக்க மின்றி நிலைபெறச் செய்தும்
கடந்ததும் எதிரதும் ஆகிய வினைப்பயன்
அடலெரிப் படுத்துமாங் கெஞ்சிய வினையும்
அறும்வகை தன்னில் அகப்பற் றறுத்தும்
உவப்புட னுலகில் உடலோ டுலவும்
அவரே எனக்கிங் காசா னிதனை
அறுதியிட் டுரைப்ப னுறுதியா யென்றும்!

['அது நீயே!' - தத் த்வம் அஸி - சாம வேதம்]


8.
மனிதருந் தேவரு மவரொழித் தியங்கும்
ஏனை யுயிர்களு மகத்தினில் யானெனும்
தன்னிலை யுணர்வைத் தரிப்பது மெதனால்?
உள்ளமும் உடலும் உணர்பொறி யாவும்
எள்ளரும் சடப்பொரு ளாக்கமே யெனினும்
தாமே யுணருந் தகவுடை யவைபோல்
பூமியி லியங்கப் பெறுவது மெதனால்?
முகிலிடை மறைந்து மொளிருங் கதிர்போல்
அகில மனைத்தும் அருளொளி பரப்பும்
அதனையே அசைவிலா தடங்கிய தன்னுளத்
திருத்திய முனிவர் யாரோ வவர்தாம்
இருபிறப் பாளரோ இழிகுலத் தவரோ
குருவெனக் கென்றே உறுதியா யுரைப்பன்

[மேம்படும் உயிரே மேலாம் ப்ரஹ்மம் - அயம் ஆத்மா ப்ரஹ்மம் - அதர்வண வேதம்]


9.
ஆன்றவிந் தடங்கிய முனிவன துளத்துத்
தான்பெற்ற இன்பக் கடலின தொருதுளி
வாசவன் முதலாத் தேவர்கட் கெல்லாம்
ஆசறு முவகையும் அமைதியுந் தருமெனில்
அத்தகை யின்பத் தழிவிலாக் கடலில்
இத்தரை யிற்றான் பெற்ற அறிவுணர்வு
அத்தனையும் கரைத் தானபின், தானோர்
பிரம முணர்ந்தவன் என்பதொன் றின்றித்
தானே பிரமமாய், வானவர் கோன்முதல்
யாவரும் தன்னடி பணியும் நிலைபெற்
றவனே எனக்கிங் காசான் இதனைத்
தவப்பெருந் துணிவுட னுரைத்திடு வேனே!

[குருவே ப்ரஹ்மம்!]






4. ChandALan Kootru

2.
இலகு முணர்  வற்றதொ  ருடலோ, அதனுள் 
நிலவுமுணர் வுற்றதொ  ருயிரோ, நீவிர் 
விலகென  விளம்பிய தேதென வுரைப்பீர் 
விலகுவதுணர் வுடை யதுவோ? இலதோ?


3.
ஆற்று நீரினும் சேற்று நீரினும் தோற்று கின்ற பிம்பங்கள் 
ஏற்ற வானக் கதிர தன்றி வேற்றுப் பொருள தாகுமோ?
பொற்கு டத்தினும் மட்கு டத்தினும் உள்ள தாகும் வெளியிடம் 
உற்றவி  ரண்டின் புறத்தி லன்றி அகத்தில் வேறு வேறுமோ?


4.
அகமதிற் கலக்க மின்றி ஆனந்த அறிவின் ஒளிதான்
மிகப்படு மாயி னாங்கே புறத்தினிற் காணு கின்ற
இகழ்ச்சியு மதனின் வேறாய் மிகைப்படு முயர்வு முண்டோ?
இகத்தினிற் காணு கின்ற பொருளெலா மொன்றே யன்றோ?
  

3. Preamble

1.
செழுமைசேர் கங்கைநீரில் ஆடிய சங்கரர்தாம்
அழிவிலாச் சிவனையாங்கே வழிபடச் செல்லும்போதில் 
இழிகுலத் தொருவனாங்கே எதிர்ப்பட வவனைநோக்கி 
வழியிடை நில்லா தேகென விளம்பிட வவனுஞ்சொல்வான்